மரபு விதை காப்பாளர் திரு. நெல் ஜெயராமன் மறைவு

By   06/12/2018

கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கடுமையான நோயோடு போராடிய நம் ஜெயராமன் இன்று நம்மிடமில்லை.

பெட்காட் ஜெயராமன் ஆக, நுகர்வோர் அமைப்பின் கள செயற்பாட்டாளராக, கட்டி மேடு என்ற அடையாளம் தெரியாத குக்கிராமத்தில் இயங்கியவர் ஜெயராமன்.

நம்மாழ்வார், “ஈரோடு மாவட்டத்திற்கு இனி நான் தேவையில்லை” என்று தஞ்சையில் இயங்கத் தொடங்கிய போது நம்மாழ்வாரால் ஈர்க்கப்பட்டார். நுகர்வோர் உரிமைகளில் நஞ்சில்லாத உணவு முக்கியமில்லையா என்ற கேள்வியின் ஆழம் புரிந்த ஜெயராமன் நம்மாழ்வாரோடு கை கோர்த்தார்.

பாரம்பரிய விதைகளின் தேவை, பாதுகாப்பது, பரவலாக்குவது போன்ற விசயங்கள் எப்போதும் ஆழ்வாரின் இதயத்திற்கு நெருக்கமான ஒன்று. “நம் நெல்லைக் காப்போம்” (Save Our Rice Campaign) தீவிரமாகும் போதுதமிழகத்தில் இந்த வேலைகளை எடுத்துச் செல்ல ஜெயராமனிடம் பணித்தார். மேலும் விதைகள் நம்மோடு மட்டும் இருந்து விடக்கூடாது. விதைகள் விவசாயிகளால் பாதுகாத்து, பரவலாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றும் பணித்தார். அதன் விளைவு தான் நெல் திருவிழாவும் விதை பகிர்வும், பரிமாற்றமும்.

ஜெயராமனைத் தவிர வேறு எவரும் இந்த முக்கியமானப் பணியை இவ்வளவு சிறப்பாக செய்திருக்க முடியாது. அத்தகைய சிறந்த களப் பணியாளர். பத்தாண்டுகளுக்கும் மேலாக நடந்த நெல் திருவிழா தமிழக விவசாய தளத்தில் உருவாக்கிய மாற்றமும் தாக்கமும் மிகப் பெரியது. பல்லாயிரம் விவசாயிகள் பாரம்பரிய நெல்லைக் பயிரிடுவதற்கு காரணமானதால் பெட்காட் ஜெயராமன் நெல் ஜெயராமனாக நம் உழவர்களால் கொண்டாடப்பட்டார்.

இன்று நம் உழவர் சமூகத்தில் பாரம்பரிய நெல் பரவலாகி இருப்பதற்கு நெல் ஜெயராமனின் உழைப்பு அளப்பரியது.

என்னுடைய தளபதிகளில் ஒருவர் என நம்மாழ்வார் புளகாங்கிதத்துடன் ஜெயராமனைச் சொல்வார். நம்மாழ்வாரின் மறைவுக்குப் பின் இந்த வேலை நின்றுவிடும் எனப் பலரும் நினைத்த போது அந்த நினைப்புகளைப் பொய்யாக்கிய ஜெயராமன் இனி இது உங்கள் வேலை என நம்மிடம் கொடுத்து விட்டு, நம்மிடம் இருந்து விடை பெற்றுவிட்டார்.

பாரம்பரிய நெல்லைப் பரவலாக்கும் பணியில் மிகப் பெரிய பங்கு வகித்த ஜெயராமனுக்கு நாம் செய்யும் உண்மையா அஞ்சலி ஒவ்வொரு விவசாயியும் ஒரு நெல் ரகத்தையாவது தன் வாழ்நாள் முழுக்க காப்பாற்றி வருவேன் என உறுதி கொள்வதும் நடைமுறைப்படுத்துவதும் தான் எனக் கருதுகிறோம்.
பலநூறு ஜெயராமன்கள் நம்மிடமிருந்து முகிழ்த்து வர வேண்டும். இதுவே ஜெயராமனுக்கும் நம்மாழ்வாருக்கும் நாம் செய்யும் உண்மையான செயல் அஞ்சலியாக இருக்கும்.

இந்த துக்கமான சூழலில் ஒன்றை நினைவு கூறவும் வானகம் கடமைப்பட்டுள்ளது.
ஜெராமனுக்கு உடல்நலக் குறைவு என்றதும் அவருடைய உடல் நலனில் நம் உழவர்களும், பிறரும் காட்டிய அக்கறையும், நீட்டிய உதவிக்கரமும் நன்றிக்குறியது. நம் சமூகத்திற்காக கைமாறு கருதாது உழைப்பவரின் பிரச்சனையை தங்களுன் பிரச்சனையாக எடுத்துக் கொண்ட பண்பு, களப் பணியாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் ஒன்றாகும்.

எங்களின் சக செயல்பாட்டாளருக்கு அரசு அளித்த உதவிகள், மற்றவர்கள் அளித்த உதவிகள் அனைத்தும் சிறப்பானவை, நினைவு கூறத் தக்கவை. அவர்களுக்கு வானகம் நன்றியை சமர்பித்துக் கொள்கிறது.

வானகம் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறது.

வானகம்
நம்மாழ்வார் உயிர்ச்சூழல் நடுவம்